திருவாரூர் மாவட்ட மழை வெள்ள பாதிப்புக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் கோரிக்கை. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 26 November 2025

திருவாரூர் மாவட்ட மழை வெள்ள பாதிப்புக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் கோரிக்கை.


திருவாரூர், நவ.26 :

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் மற்றும் முத்துப்பேட்டை ஒன்றியங்களின் மருதவனம், மீனமநல்லூர், மாங்குடி, வடசங்கந்தி, குமாராபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை–வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர் ஆர். காமராஜ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.


பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக திருவாரூர் முழுவதிலும் சுமார் 1 லட்சம் ஏக்கர் விவசாயப் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் நேரடி நெல் விதைப்பில் 20 நாள்களே ஆன நெற்பயிர்கள் கடந்த 5 நாட்களாக நீர் வடியாமல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


இதற்குக் காரணம், ஆறுகளும், பாசன வாய்க்கால்களும், வடிகால் வாய்க்கால்களும் முறையாக தூர்வாரப்படாதது என அவர் குறிப்பிட்டார். வளவனாறு, மரக்கான் கோரையாறு, புது பாண்டியாறு போன்ற ஆறுகளில் ஆகாயத்தாமரைகள் மிகுந்து வளர்ந்து தண்ணீர் ஓட்டத்தை தடுத்துவிட்டதாகவும் கூறினார்.


மேலும்,
– விவசாயக் கடன்கள் தேவையான அளவு வழங்கப்படவில்லை,
– உர தட்டுப்பாடு நிலவுகிறது,
– குறுவை சாகுபடியில் கிடைத்த நெல் விற்பனைக்கு சிரமம்,
என பல பிரச்சினைகள் விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சென்று பார்க்கவும், ஆய்வு செய்து உடனடி நிவாரணம் வழங்கவும் அரசு முன்னெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “அரசு போர்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு விவசாயிகளையும் அவர்களின் சாகுபடிகளையும் காப்பாற்ற வேண்டும்” என அவர் கோரினார்.


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்பு வந்துச் சந்தித்ததைத் தொடர்ந்து நெல் கொள்முதல் நடைபெற்றது. ஆனால் தற்போதைய வெள்ள பாதிப்பில், அமைச்சர் மற்றும் ஆட்சி சார்பில் எவரும் வரவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்ததாகவும் அவர் கூறினார். இந்த ஆய்வில் ஒன்றிய செயலாளர்கள் நடராஜன், அம்பிகாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad